Thursday, July 26, 2012

முதலாழ்வார்கள் வைபவம்



ஸ்ரீ:
ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே இராமனுசாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:
ஸ்ரீமத்  வரத குரவே நம:


மற்றுள்ள ஆழ்வார்களுக்கு முன்னே வந்துதித்து 
நற்றமிழால் நூல் செய்து நாட்டையுய்த்த - பெற்றிமையோ 
ரென்று  முதலாழ்வார்களேன்னும் பேரிவர்க்கு 
நின்றதுலகத்தே நிகழ்ந்து. 

துலாயாம்  ஷ்ரவனே ஜாதம் காஞ்ச்யாம் காஞ்ச நவாரிஜாத்  
த்வாபரே  பாஞ்சஜன்யாம்சம் சரோயோகிநமாஸ்ரயே ||

துலா  தநிஷ்டாசம்பூதம் கல்லோல மாலின:
தீரே  புல்லோத்பலே மல்லார்புர்யாமீடே கதாம்சகம் ||  

துலா  சதபிஷக்ஜாதம் மயூரபுரிகைரவாத்  
மஹாந்தம் மஹதாக்யாதம் வந்தே ஸ்ரீநந்தகாம் சகம் ||

பொய்கையார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் மூவரும் முதலாழ்வார்கள் என்னப்படுவார்கள். இவர்கள் மூவரும் ஓடித்  திரியும் யோகிகளாய், பரம்பொருளான ஸ்ரீ நாராயணனுக்கு அடிமை பூண்டு, அவன் புகழ் பாடித் திரிந்தனர். இவர்கள் அயோநிஜர்களாய், பொய்கையார் காஞ்சிபுரியில்  பொய்கையிலும், பூதத்தாழ்வார் திருக் கடல் மல்லையில் நீலோத்பலமலரிலும், பேயாழ்வார் திருமயிலையில் ஒரு கிணற்றில் செவ்வெல்லிப் பூவிலும் முறையே ஐப்பசி மாதத்தில் திருவோணம், அவிட்டம் மற்றும் சதய நக்ஷத்திரத்தில் திருவவதரித்தனர். இவர்களில் பொய்கையார் பாஞ்சஜன்ய அம்சம்; பூதத்தாழ்வார் திருமாலின் கதையின் அம்சம்; பேயாழ்வார் திருமாலின் வாளான நந்தகியின் அம்சம்.


 பொய்கையார்


ஒரு நாள் இவர்களுடன் கலந்து பரிமாறத் திருஉள்ளம் பற்றிய பெருமான், பொய்கையாரைத் திருக்கோவலூரிலுள்ள மிருகண்டு மகரிஷியின் ஆச்ரமத்தில் மழைக்கு ஒதுங்கச் செய்தான். அதே இடைகழியில் பூதத்தாழ்வாரும் மழைக்கு இடம் வேண்டி நிற்க அப்போது பொய்கையார் "ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம்" என பூதத்தாழ்வாருக்கு இடமளித்தார். பின்பு பேயாழ்வாரும் அங்கே வர, "ஒருவர் படுக்கலாம், இருவர் அமரலாம், மூவர் நிற்கலாம்" என மூன்று ஆழ்வார்களும் இடைகழியில்  பகவத் குணாநுபவம் செய்து இருக்க, பெருமான் தானே வந்து அந்த இடைகழியில் இவர்களை நெருக்க ஆரம்பித்தான். இப்படி நெருக்குகிறவர் யார் என்று தெரிவதற்காக, பொய்கையார் "வையம் தகளியா வார் கடலே நெய்யாக வெய்ய கதிரோன் விளக்காகஎனவும், பூதத்தாழ்வார் "அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக இன்புருகு சிந்தை இடுதிரியா, நன்புருகி ஞானச் சுடர் விளக்கேற்றினேன் " எனவும்  விளக்கேற்ற, தமிழ்த் தலைவனான பேயாழ்வார்"திருக்கண்டேன் பொன்மேனி கண்டேன் " என கோவலுள் மாமலராள் தன்னோடு மாயனைக் கண்டமை சொன்னார்.


பூதத்தாழ்வார்

பின்பு மூவரும் லோகோஜீவனமாக திவ்ய பிரபந்தங்களை அருளிச் செய்தனர். "இம்மூவருக்கும் அர்த்தம் ஒன்றே; மூன்று ரிஷிகள் கூடி ஒரு வ்யாகரணத்திற்கு கர்த்தாக்கள் ஆனார்ப் போலே கர்த்ருபேதம் உண்டேயாகிலும் அர்த்த சரீரம் ஒன்று; த்ரிமுனி வ்யாகரணம் என்னுமா போலே" என்று பெரிய ஆச்சான் பிள்ளை அருளிச் செய்வர். அதாவது இவ்வாழ்வார்கள் மூவராய் இருந்து இவர்கள் தனித் தனியே திவ்ய  பிரபந்தங்கள் அருளிச் செய்தாலும், இம்மூன்று பிரபந்தங்களுக்கும் நோக்கு பரத்வத்திலேயே ஆகும். எங்கனே என்னில், பொய்கை ஆழ்வார், "வையந் தகளியா ..... சுடராழியான்" என்று உபய விபூதிக்கு நாதன் என்று நாராயணனின் பரத்வத்தை பேசினார். பூததாழ்வாரோ என்னில் "சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு" என்று பரம்பொருள் உபய விபூதி நாதனான நாராயணன் என்று நிலை நாட்டினார். பேயாழ்வாரோ "திருக் கண்டேன் " என்று பிராடியுடைய சம்பந்தத்தையிட்டு பரத்வத்தை நிலை  நாட்டினார். {இவை அனைத்தும் ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளையுடைய வியாக்யானங்களில் சேவித்து ஈண்டு அனுபவிக்கத் தக்கவை}. எனவே தான் ஸ்ரீ பெரியவாச்சான்பிள்ளையும், "சுகாதிகளும் முதலாழ்வார்களும் பரத்வதிலே ஊன்றி இருப்பர்கள்" {திருநெடுந்தாண்டகம் அவதாரிகை} என்று அருளிச் செய்தார்.




பேயாழ்வாரே திருமழிசைப் பிரானைத் திருத்திப் பணி கொண்டார். இனி இவர்களது திருவந்தாதிப் பாசுரங்களில் முறையே ஒன்று என மூன்று பாசுரங்களை பற்றி வாய் வெருவலாம். பொய்கை ஆழ்வார் முதல் திருவந்தாதியில்,


அரவம் அடல்வேழம் ஆன்குருந்தம் புள்வாய்
குரவை குடம்முலைமல் குன்றம், - கரவின்றி
விட்டிறுத்து மேய்த்தொசித்துக் கீண்டுகோத் தாடி,உண்
டட்டெடுத்த செங்கண் அவன்.                                                                                             

காளியநாகத்தை வலியடக்கி உயிரோடு விட்டதும், குவலயா பீடமென்னும் கம்ஸனது யானையைக் கொம்புமுறித்து முடித்ததும் , தன்மேன்மையைப் பாராமல் தாழநின்று பசுக்களைமேய்த்ததும், அஸுரன் ஆவேசித்திருந்ததொரு குருந்தமரத்தை முறித்து வீழ்த்தியதும், பகாஸுரன் வாயைக் கீண்டொழித்ததும், இடைப்பெண்களோடே குரவைக் கூத்தாடியதும், குடங்களெடுத்தேற வெறிந்தாடியதும், தன்னைக் கொல்லுமாறு தாய்வடிவு கொண்டு வந்த பூதனையின் ஸ்தனங்களை உறிஞ்சியுண்டதும், மல்லர்களைக் கொன்றதும், கோவர்த்தனமலையைக் குடையாகவெடுத்தேந்தி நின்றதுமாகிய  இச்செயல்கள் என்ன ஆச்சரியம்! என்று ஈடுபட்டுப் பேசினாராயிற்று. இப்பாடலில் மட்டும் {அரவம் விட்டு, அடல் வேழம் இறுத்து, ஆன் மேய்த்து, குருந்தம் ஒசித்து, புள்வாய் கீண்டு, குரவை கோத்து, குடம் ஆடி, முலை உண்டு, மல் அட்டு, குன்றம் எடுத்த} என பத்து கிருஷ்ண சேஷ்டிதங்களைப் பற்றி பாடியுள்ளார். 

பூததாழ்வாரோ,

தனக்கடிமை பட்டது தானறியா னேலும்
மனத்தடைய வைப்பதாம் மாலை, - வனத்திடரை
ஏரியாம் வண்ணம் இயற்று மிதுவல்லால்,
மாரியார் பெய்கிற்பார் மற்று.

என மிக அற்புதமாக அருளிச் செய்தார். இது மிகவும் ஆச்சர்யமான பாசுரம். ஆழ்வார்களே நாராயணனைப் பற்றியும், வேதத்தின் உட்பொருளை பற்றியும் ஆச்சர்யமாக கவி பாடவல்லர்கள் என்பதற்கு இப்பாசுரம் சான்றாகும். இதனை நாம் கீர்த்தி மூர்த்தியான ஸ்ரீ காஞ்சி. பிரதிவாதி பயங்கரம். மஹா மஹிமோபாத்யாய, மகாவித்வான், அண்ணங்கராசாரியார் ஸ்வாமியின் ஸ்ரீசூக்தியில் அனுபவிப்போம்.
"எம்பெருமான் எப்படியாவது நம்மைப் பெறவேணுமென்றே பற்பல அவதாரங்களெடுத்துப் படாதன படுகிறபடியால் நம்மைத் திருத்திப் பணிகொள்ளுதல் அப்பெருமானுக்கே கடமையாயிருக்கும்; நாம் யாதொரு ஸாதாநாநுஷ்டாநமும் செய்யவேண்டா; ஆனாலும் நம்மை மண்ணும் மரமும் கல்லும் கரியும்போலே அசேதநப்பொருளாகப் படைக்காமல் சேதநப்பொருளாகப் படைத்துள்ளதனால் நாம் அறிவுபெற்றுள்ள வாசிக்காகச் செய்யத்தக்க தொன்றுண்டு, அதாவது அவனைப் பெறவேணுமென்னும் ருசிமாத்திரம் நமக்கு இருக்கத்தகும்.  மற்றபடி பேற்றுக்கு உபாயமாக நாம் முயற்சி செய்ய வேண்டுவதொன்றுமில்லை என்கிற ஸகல சாஸ்த்ரஸாரப் பொருளை வெளியிடுவதாம் இப்பாசுரம்.


இதில் முன்னடிகளுக்குப் பலவகையாகப் பொருள்கொள்ள இடமுண்டு.  நம்மனத்தில் எம்பெருமான் வந்து தங்கும்படி விலக்காமையுடன் இருக்க வேண்டுவதே நாம் செய்யக்கூடிய செயல்; அங்கே வந்து இடைவிடாது தங்கும்படி அப்பெருமானைச் செய்விப்பதென்பதே நமக்கு இயலாது.; ஆதலால், நமக்கு ஸ்வரூபஜ்ஞாநமும் முற்றமுதிர உண்டாகாவிடினும், விலக்காமை என்கிற இவ்வளவு மாத்திரம் நம்மிடத்து உண்டானால் எம்பெருமான் அதனையே பற்றுக்கோடாகக் கொண்டு நம்முடைய விரோதிகளைப் போக்கித் தன்னைத் தந்தருள்வன் - என்பதாகக்கொள்ளலாம்.

அன்றியே; அவ்வெம்பெருமான் சேஷி, தான் சேஷன் என்றறிகின்ற விவேகமில்லாதவனாகவே இச்சேதநன் இருந்தாலும், இவனுக்கு அப்பெருமானிடத்து ருசியில்லாமலிருந்தாலும், (பெரியோன் எந்த எந்தச் செயலைச் செய்கிறானோ அந்தச் செயலையே மற்றுள்ள ஸாமாந்யஜநங்களும் செய்கிறார்கள்) என்றதற்கேற்ப, பெரியோர் செய்யும் முறையைமையைக் கண்டாகிலும் ஸர்வேச்வரனை ஹ்ருதயத்திலே கொண்டு இச்சேதநன் தியானிக்கக் கடவன்; இவ்வளவே கொண்டு எம்பெருமான் விரோதிகளைத் தொலைத்து ஸ்வப்ராப்தியையும் செய்து தருவன் - என்பதாகவுங் கொள்வர்.  மற்றும் பலவகைகளுங் காண்க.

பின்னடிகளில் அருளிச் செய்யப்பட்டுள்ள த்ருஷ்டாந்த வாக்கியார்த்தத்தின் ஸ்வாரஸ்யத்தை உணர்ந்த கொண்டு அதற்கிணங்க முன்னடிகளின் ஆழ்ந்த கருத்தை அறிந்துகொள்க.  காடெழுந்து மேடாயிருந்த நிலத்தைச் சீர்திருத்தி ஏரியாக வெட்டுகின்றோமாயின் இக்காரியம் மழைபெய்வதற்கு ஸாதநமாக மாட்டாது;  நாம் ஏரி வெட்டுகிறோமென்பது கொண்டே பர்ஜந்யதேவன் மழை பெய்து விடுவனோ? மழை பெய்வதென்பது பகவத் ஸங்கல்பாதீநமாகையால்.  அப்படிப்பட்ட மழைக்கு ஏரிவெட்டுதல் உபாயமாகமாட்டாது.  இஃது உலகறிந்த விஷயம்.  ஏரி வெட்டுதல் மழைபெய்வதற்கு உபாயமன்றாகில் வீணாக ஏரி வெட்டுவானேன்?  என்று நினைக்கலாகாது; எப்போதாவது பகவத் ஸங்கல்பத்தாலே மழை பெய்யுமாகில் அந்த மழை நீரை வனத்திடர் தாங்கிக் கொள்ளமாட்டாது; நாம் அந்த வனத்திடரைச் சீர்திருத்தி ஏரியாக அமைத்து வைப்போமாயின், மழை பெய்யும்போது வரும் தண்ணீர் அதிலே தங்குவதற்குப் பாங்காகும்.  ஆகவே மழைநீர் பழுதுபடாமைக்காக ஏரி வெட்டுதலேயன்றி மழையைப் பெய்வித்தற்காகவன்று என்பது விளங்கும்.  இவ்வாறே, நாம் சேதநராகப் பிறந்துள்ள வாசிக்காக நம்முடைய நிலைமைய சீர்ப்படுத்திக் கொள்வதானது பகவத்ப்ராப்திக்கு  ஸாதநமாகமாட்டாது; ஒருகால்  பகவான் நம்மை திருவுள்ளம் பற்ற வருவானாயின் அவனுடைய விஷயீகாரம் நம்மிடத்தில் நன்கு தங்குவதற்குப் பாங்காகும்.  நம்மை நாம் சீர்திருத்தி வைத்துக் கொள்ளுதல்.

திருத்தமுறாத சேதநரை வனத்திடரின் ஸ்தாநத்திலே கொள்க; அத்வேஷாதிகளாலே தம்நெஞ்சைத் திருத்திக் கொள்வதானது ஏரியாம் வண்ண மியற்றுகையாம்; பகவத்ப்ராப்தி கைபுகுதல் மாரிபெய்கையாம்.  ஆகவே நாம் செய்யும் ஸுக்ருதங்களெல்லாம் நிர்ஹேதுகமாகவுண்டாகிற பகவத் விஷயீகாரத்தைத் தாங்கிக் கொள்வதற்கு மாத்திரம் உறுப்பாகுமேயொழிய, பகவத் விஷயீகாரத்தை நிர்ப்பந்தப்படுத்தி யுண்டாக்குவதற்கு உறுப்பாக மாட்டாதென்று சேதநக்ருத்யங்களின் அநுபாயத்வம் ஸ்தாபிக்கப்பட்டதாயிற்று இப்பாட்டில்."


நீயன்றே நீரேற் றுலகம் அடியளந்தாய்,
நீயன்றே நின்று நிரைமேய்த்தாய் - நீயன்றே
மாவா யுரம்பிளந்து மாமருதி னூடுபோய்,
தேவா சுரம்பொருதாய் செற்று (மூ.திரு)

"ஒன்றோடொன்று சேராதசெயல்களைச் செய்தவன் நீயோவென்கிறார். மாவலிபக்கல் யாசகனாய்ச் சென்றாய் என்றும் விம்மவளர்ந்து உலகங்களையெல்லாம் அளந்தாய் என்றும் கேள்விப்படுகிறோம், யாசகனாய்ச்சென்ற செயலாலே அசக்தியைக் காட்டிக்கொண்டாய், உலகளந்த செயலாலே ஒப்பற்ற சக்தியைக் காட்டிகொண்டாய், இவை என்சொல்? தவிரவும் நீ திருவாய்ப்பாடியில் இடையனாய்ப்பிறந்து அந்த நிலைமையிலேயே கேசியின் வாயைக் கீண்டொழித்தாயென்றும் கேள்விப்படுகிறோம். இவையும் அப்படியே அன்றியும், நீ கண்ணாய்ப்பிறந்து குழந்தையாயிருக்குங் காலத்தில், துன்பப்படுத்துகின்ற பல விளையாடல்களைச் செய்யக் கண்டு கோபித்த யசோதை உன்னை வயிற்றில் கயிற்றினால் கட்டி உரலிலே பிணித்துவிட, அவ்வுரலையும் இழுத்துக்கொண்டு தவழ்ந்து அங்கிருந்த இரட்டை மருதமரத்தின் நடுவே சென்றாய் என்றும், தேவாஸுரயுத்தத்தில் அசுரர்களைக்கொன்று தேவர்களை வெற்றி பெறுவித்தாயென்றும் கேள்விப்படுகிறோம், இவையும் அப்படியே, ஆகவிப்படி அசக்தியையும் காட்டவல்ல செயல்களைச் செய்த மஹாநுபாவன் நீயோ பிரானே! என்றாராயிற்று."
 முதலாழ்வார்கள் திருவடிகளே சரணம்.

Introduction


ஸ்ரீ:
ஸ்ரீமத்யை கோதாயை நம:
ஸ்ரீமதே இராமானுசாய நம:
ஸ்ரீமத் வரவரமுநயே நம:

ஸ்ரீமத் வரதகுரவே நம:


Sri:

ஸ்ரீ சைலேச தயாபாத்ரம் தீபக்யாதி குணார்நவம்

யதீந்திர ப்ரணவம்  வந்தே ரம்ய ஜாமாதரம் முநிம்||


ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி
தாழ்வாது மில் குரவர் தாம் வாழி - ஏழ்பாரும் 
உய்ய அவர்கள் உரைத்தவைகள் தாம் வாழி
செய்ய மறை தம்முடனே சேர்ந்து.




ச்ரியபதியாய் அவாப்த சமஸ்த காமனாய் ஸ்ரீ வைகுண்ட நிகேதநனான சர்வேஸ்வரன், சம்சாரிகளான சேதனர் மீது இரக்கம் பிறந்து,நாம் அவனை அடைந்து நித்ய முக்தரோடே கூடி  அவனை அனுபவிக்கிற பேற்றை பெறுவதற்காக, நமக்கு கரண களேபரங்களை கொடுதருளினான்.



நாம் அக்கரணகளேபரங்களைக் கொண்டு அவனுடைய திவ்ய சரிதைகளை பேசி வாய் வெருவவும்,கைகளாரத் தொழவும்,திவ்ய தேசங்களை நாடி நடக்கவும் வேண்டும்.அப்படி இல்லாமல் உலகில் விஷயாந்தரன்களைக் கண்ட கண்களையும், பேசிய வாயையும் சுத்தி பண்ணும் பொருட்டு, சமஸ்த கல்யாண குணனான எம்பெருமானை பற்றியும், ஆழ்வார்கள் மற்றும் ஆசார்யர்களைப் பற்றியும்  பேச எண்ணி இந்த blog எழுதுகிறேன் அடியேன்.


என்னை புவியில் ஒரு பொருளாக்கிய, அடியேனுடைய ஆசார்யன் "ஸ்ரீ உ. வே ஆத்தான் ஸ்வாமிக்கும்", ஞானாசிரியர்களான "ஸ்ரீமத் உபய வே  பிரதிவாதி பயங்கரம் சம்பத் ஸ்வாமிக்கும்" "ஸ்ரீ உ. வே. கோமடம் சம்பத் ஸ்வாமிக்கும்" அடியேன் தலை அல்லால்   கை மாறிலேன். "முயல்கின்றேன் உந்தன் மொயகழற்க்கன்பையே" என்று ஸ்ரீ மதுரகவிகள் சாதித்தருளியதர்க்கிணங்க  அடியேன் இவர்களிடத்தில் நிச்சலும் இவர்களது உபகாரத்துக்கு பிரத்யுபகாரம் செய்ய முடியாது தடுமாறுகிறேன். இவர்களிடத்தில் அடியேனை ஆச்ரயிக்க செய்த சர்வேஸ்வரனுக்கு நன்றியும் அஞ்சலியுமே கண்ணீருமே அடியேன் படைப்பது.



ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்